×

‘ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள்’ நிகழ்ச்சி அரசுப்பள்ளிகளில் வீடியோ ஒளிபரப்பு

திருவாரூர் : ‘ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள்’ நிகழ்ச்சி மூலம் விண்வெளி துறையில் வருங்காலத்தில் மாணவர்கள் சாதனை படைக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீடியோ ஒளிபரப்பப்பட்டது.உலக நாடுகள் வியக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தில் பங்காற்றிய விஞ்ஞானிகளில் தமிழகத்தை சேர்ந்த வீரமுத்துவேல் உள்பட பல்வேறு விஞ்ஞானிகளின் பங்களிப்பு உள்ளது. விண்வெளி துறையில் உலக அளவில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். இந்நிலையில் இவர்களைப் போன்று வரும் காலத்தில் மாணவர்களும் விஞ்ஞானிகளாக மாற வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ‘ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்களின் பங்கு என்பது குறித்து மாணவர்களுக்கு வீடியோ ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

திருவாரூர் விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சியை கலெக்டர் சாரு தொடங்கி வைத்து, மாணவர்கள் வருங்காலத்தில் இதுபோன்று சாதனை படைக்க வேண்டும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் மணிமேகன், முல்லைநாதன், தாசில்தார் நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி: மன்னார்குடி அரசு உதவி பெறும் தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை அருட்சகோதரி ஜெபமாலை தலைமையில் ‘ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள்’ நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியை சகாய லில்லி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி அன்பரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்று வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். முன்னதாக அறிவியல் மன்ற பொறுப்பாசிரியர் அவிலா பிரான்சிஸ் வரவேற்றார். அறிவியல் ஆசிரி யை சங்கீதா நன்றி கூறினார்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் அறிவியல் மன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு அரசின் ‘ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள்’ விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா விடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. நீடாமங்கலம் வட்டாரத்தில் உள்ள 110 அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் இந்த நிகழ்ச்சியை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

The post ‘ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள்’ நிகழ்ச்சி அரசுப்பள்ளிகளில் வீடியோ ஒளிபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து...